

தென்காசி:
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் காலம் ஆகும். அப்போது, இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி முதல் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், 2 தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்து இருந்தவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் குற்றாலம் வழியாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் திரண்டனர். அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்தாலும் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். தடுப்பூசி சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.