ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் 30-ந் தேதி கடையடைப்பு போராட்டம்

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 30-ந்தேதி தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் 30-ந் தேதி கடையடைப்பு போராட்டம்
Published on

திருச்சி,

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடையடைப்பு போராட்டம்

மத்திய அரசு அகில இந்திய அளவில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையை அனுமதியளிக்க உத்தேசித்துள்ள சட்டத்தினை எதிர்த்து வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது. மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் தவிர சுமார் 30 ஆயிரம் மருந்து கடைகள் இதில் பங்கேற்கும். எனவே பொதுமக்கள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் வாங்கப்படும் மருந்துகளில் போலி மருந்துகள் விற்கப்படும் அபாயமும், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விபரீதமும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் போதை மருந்துகள், கருத்தடை மருந்துகள் மற்றும் ஊக்க மருந்துகளை சுலபமாக வாங்கிட வழிவகுக்கும் என்பதால் இதனை எதிர்க்கிறோம். அன்றைய தினம் இந்தியா முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகள் மூடப்படும்.

லாப சதவீதம்

மத்திய அரசு 1985-ல் அறிவித்த லாப சதவீதம் தற்போது தயாரிப்பாளர்களால் கொடுக்கப்படுவது இல்லை. எனவே மொத்த வியாபாரிகளுக்கு 10 சதவீதமும், சில்லறை வணிகர்களுக்கு 20 சதவீதமும் லாப சதவீதத்தை உறுதிப்படுத்த வேண்டும். மருந்து உரிம கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தியதை திரும்ப பெறவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொருளாளர் கோபிநாதன், மாநில துணை தலைவர் மனோகரன், திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் ஆனந்தன் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com