நாமக்கல் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று 2-ம் கட்ட பயிற்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
Published on

நாமக்கல்:

2-ம் கட்ட பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 19 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என 3 ஆயிரத்து 328 பேருக்கு தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. அதன்படி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்கள்

இதேபோல் பாண்டமங்கலம், வெண்ணந்தூர் மற்றும் அத்தனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், நாமகிரிப்பேட்டை, பரமத்தி மற்றும் சீராப்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மல்லசமுத்திரம் மற்றும் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், படைவீடு மற்றும் ஆர்.புதுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், பட்டணம் மற்றும் பொத்தனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த பேரூராட்சிகளின் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு பள்ளிபாளையம் எஸ்.பி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிள்ளாநல்லூரில் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, வேலூரில் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என மொத்தம் 19 பேரூராட்சிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்

இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை, வாக்குப்பதிவு எந்திரத்தினை கட்டுப்பாட்டு எந்திரத்துடன் இணைப்பது குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்வது, தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது, வாக்குச்சாவடியில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 18-ந் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செங்கோடு நகராட்சி தேர்தலையொட்டி 88 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 308 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com