

ஆரணி,
விபத்தில் விமான நிலைய ஊழியர் பலி
ஆரணியை அடுத்த களம்பூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 26). சென்னை விமான நிலையத்தில் சமையல்காரராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ராஜேஷ் வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் வீட்டில் இருந்து ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர், அம்பேத்கர் பகுதியில் சாலையை கடக்கும்போது, அந்த வழியாக ஆரணியில் இருந்து உடுமலைபேட்டைக்கு தவிடு ஏற்றிச் சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரிக்கு தீ வைத்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
டிரைவர் கைது
இதனையடுத்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் ஆயிரமங்கலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.