

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 54 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த களப்பணியாளர்களைக் கொண்டு கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துதல், புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்கள் நடத்துதல், சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கள ஆய்வின் போது மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் மற்றும் முத்து கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களின் உற்பத்தி நிலைகள் இருப்பதும், கழிவுநீரை சாலையில் நேரடியாக விடுவதும் போன்ற நிகழ்வுகள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 54 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கழிவுநீரை முறையாக தங்களது வளாகத்தில் உறிஞ்சுகுழி அமைத்து அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அதிகமான அபராதம் விதித்தல், குடிநீர் இணைப்பு துண்டித்தல், புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பத்திருப்பவர்களுக்கு இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைத்தல், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் கட்டிட அனுமதி ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.