தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தற்போது 437-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் கொடிப்பவனி நடந்தது. திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடி ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் காணிக்கையாக எடுத்து வரப்பட்டன.

நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2-வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி, பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் ஸ்டீபன் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேராலய பங்கு தந்தை குமார் ராஜா, கீதாஜீவன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அருண் சக்திகுமார் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும், மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.

கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அருண் சக்திகுமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆலயத்தை சுற்றிலும் உயரமான கட்டிடங்களில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெண்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com