விதிமுறைக்கு மாறாக வெடிபொருட்கள் கொண்டு வந்த 2 பேர் கைது

பல்லடம் அருகே விதிமுறைக்கு மாறாக வெடி பொருட்கள் கொண்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 3 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 1,500 டெட்டனேட்டர்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விதிமுறைக்கு மாறாக வெடிபொருட்கள் கொண்டு வந்த 2 பேர் கைது
Published on

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களில் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் அட்டைப்பெட்டிகளில் 3 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1,500 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்ததை போலீசார் பார்த்தனர். ஜெலட்டின் குச்சிகள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை ஒரு சேர கொண்டு வரக்கூடாது என்ற விதியை மீறி அவைகளை ஒன்றாக கொண்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஜெலட்டின் குச்சிகள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் மேட்டூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 35) மற்றும் அதே ஊரை சேர்ந்த கார் ஓட்டுனர் சக்திவேல் (35) என்பதும் தெரியவந்தது. அத்துடன் அந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் பாறைக்குழிகளுக்கு வெடிமருந்தாக பயன்படுத்த கொண்டு வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து விதிமுறைக்கு மாறாக வெடிபொருட்களை கொண்டு வந்ததாக கூறி அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வெடிபொருட்கள் கொண்டு வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com