

திட்டச்சேரி,
குடிநீர் தட்டுப்பாடு
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் வருவதில்லை.
பருவமழை பெய்யாததால் நாகை மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்ட நிலமாகவே காணப்படுகிறது. எனவே நாகை மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆழ்குழாய் கிணறுகள்
தற்போது நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகிக்கப்படும் தண்ணீரும் சரிவர வழங்கப்படுவது இல்லை. இந்தநிலையில் கோடைக்காலத்தில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) செந்தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் பணியாளர்களிடம், அதிகாரிகள் அறிவுறுத்தினர்.