

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவுதலை தடுக்கும் பொருட்டு, மக்கள் நலனை முக்கியமாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 504 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 16 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்படவும் உள்ளது.
சிறுவர்கள்
ஈரோடு மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்பட உள்ளது. தற்போது புதிதாக மிகவேகமாக பரவிவரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
எனவே, ஈரோடு மாவட்ட பொதுமக்கள் நாளை நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 3-ம் அலையை தடுப்பது மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.