வாழப்பாடியில் பயங்கரம் கல்லால் தாக்கி முதியவர் படுகொலை மதுபோதையில் பேரன் வெறிச்செயல்

வாழப்பாடியில் கல்லால் தாக்கி முதியவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
வாழப்பாடியில் பயங்கரம் கல்லால் தாக்கி முதியவர் படுகொலை மதுபோதையில் பேரன் வெறிச்செயல்
Published on

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 31). இவருடைய மனைவி கோகிலா (23). இவர்களுக்கு கிருபாகரன் (4) என்ற மகன் உள்ளான். ஜெயக்குமார், நெல் அறுவடை செய்யும் எந்திரத்தின் டிரைவராக உள்ளார். இதனால் அவர், அடிக்கடி வட மாநிலத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். 2 மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வரும் ஜெயக்குமார், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் ஊருக்கு வந்த ஜெயக்குமார் அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோகிலா தனது மகனை அழைத்துக்கொண்டு வாழப்பாடி கிழக்குகாடு பகுதியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்து வந்த ஜெயக்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தந்தை காத்தவராயன் மற்றும் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மதுபோதையில் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் அவரது தாத்தா சின்னு (80) என்பவர் மட்டும் கட்டிலில் படுத்திருந்தார். மற்றவர்கள் வெளியில் சென்றிருந்தனர். அளவுக்கு அதிகமாக மதுபோதையில் தள்ளாடியவாறு இருந்த ஜெயக்குமார், சின்னுவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், வீட்டில் கிடந்த கல்லை எடுத்து தாத்தா என்றுகூட பாராமல் சின்னுவின் தலையில் ஓங்கி போட்டார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சின்னுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னுவை கொலை செய்த அவரது பேரன் ஜெயக்குமாரை கைது செய்தனர். வாழப்பாடியில் முதியவரை அவரது பேரன் மதுபோதையில் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com