வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

களக்காட்டில், ஒரு தலைக்காதல் தோல்வியில் முடிந்ததால், வேன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

களக்காடு,

களக்காடு தோப்புத்தெருவில் வசிப்பவர் மதியழகன் மகன் சபரிகணேஷ் (வயது 28). வேன் டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால், அந்த பெண் அவரை காதலிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நடந்தது.

அன்று முதல் சபரிகணேஷ் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றார். நேற்று வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவருடைய தந்தை மதியழகன் நேற்று மதியம் சபரிகணேஷ் இரவில் தங்கிய வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சபரிகணேஷ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அவருடைய தந்தை உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவலின் பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் சம்பவ வீட்டுக்கு சென்று, அவருடைய உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இன்று (புதன்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் நேற்று ஒரு தலைக்காதல் தோல்வியில் முடிந்ததால், வேன்டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com