

ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு பணத்தை நிரப்பும் பணியில் நேற்று முன்தினம் மாலை தனியார் நிறுவன ஊழியர்களான மதுராந்தகத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), ஊரப்பாக்கத்தை சேர்ந்த கருணாகரன்(32) ஆகியோர் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலாளியாக பீகாரை சேர்ந்த ஜியாவுதீன்(38) என்பவர் வெளியே நின்றார். பணம் இருந்த வேனை டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த உதயகுமார்(40) என்பவர் ஓட்டி வந்தார்.
மற்ற ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக வைத்து இருந்த ரூ.28 லட்சத்துடன் அவர் வேனில் அமர்ந்து இருந்தார். விமான நிலைய போர்டிகோ அருகே வேனை நிறுத்தக்கூடாது என்பதால் சற்று தள்ளி வேனை நிறுத்தி இருந்தார்.
ரூ.28 லட்சத்துடன் மாயம்
ஊழியர்கள் இருவரும் ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பிவிட்டு வேனில் ஏற வந்தனர். ஆனால் அங்கு வேன் மாயமாகி இருந்தது. உடனே டிரைவர் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விமான நிலையத்தின் வெளியே சாலையோரமாக அந்த வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.28 லட்சத்துடன் டிரைவர் உதயகுமார் மாயமாகி விட்டது தெரிந்தது. இதுபற்றி விமான நிலைய போலீசில் தனியார் நிறுவன அதிகாரிகள் புகார் செய்தனர்.
நண்பரிடம் விசாரணை
இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் உதயகுமார், கடைசியாக செல்போனில் யாரிடம் பேசி உள்ளார்? என்பதை ஆய்வு செய்தபோது, அவர் திருவொற்றியூரில் உள்ள நண்பரிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். பணத்துடன் மாயமான வேன் டிரைவரை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து உள்ளனர்.
அதில் ஒரு தனிப்படை போலீசார், உதயகுமார் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தூத்துக்குடிக்கு விரைந்து உள்ளது. மற்ற 2 தனிப்படையினரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உதயகுமாரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.