

ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பாஸ்கரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் நான் பங்கேற்று இருந்தேன். அந்த படையினரால் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த போலீசார் அனைவருக்கும் இரட்டைப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி போலீஸ்காரராக பணியாற்றிய எனக்கு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
அந்த உத்தரவு வழங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு தவறுதலாக எனக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. மேலும் என்னை பதவி இறக்கம் செய்தும் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, என்னை பதவி இறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. தேவைப்பட்டால் மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே பதவி இறக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு எனக்கு உள்துறை செயலாளர் கடந்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி மீண்டும் நோட்டீசு அனுப்பி உள்ளார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தேவையில்லை. எனவே உள்துறை செயலாளரின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அரசின் நடவடிக்கை சரிதான்
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
ஒரு உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த நிலையில், அது தொடர்பாக மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இரட்டை பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளது தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் பெற்று அதை சரிசெய்வது அரசின் கடமை.
அந்த வகையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இங்கு மனுதாரர் ஏற்கனவே விளக்கம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் ஒரு மாதத்துக்குள் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.