ஆரணியில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

ஆரணியில் காய்கறி வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
ஆரணியில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
Published on

ஆரணி,

ஆரணியில் கடந்த மாதம் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, காய்கறி மார்க்கெட், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள், டிராக்டர்கள் புதிய பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி காய்கறிகளை இறக்கி வந்தன. இதற்கு நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் தடைவிதித்தனர்.

இதனால் காய்கறி மொத்த வியாபாரிகள் கோட்டை மைதானம் அருகே ரோட்டிலேயே காய்கறிகளை இறக்கி வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள், நேற்று அதிகாலையில் காய்கறி ஏற்றிவந்த லாரிகளை பஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தி, பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லமுடியாத வகையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே போராட்டத்தை கைவிட்ட அவர்கள் காய்கறி கடைகளை அடைத்து, கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com