

ஊட்டி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் ஊழியர்கள் கடைகளில் சமூக இடைவெளி மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.
ஊட்டி அப்பர் பஜாரில் ஒரு காய்கறி கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். உடனே அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதுபோல ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு முட்டை கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.