வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் கிராமத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரித்திடவும், நாளை (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 27-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அன்றைய தினங்களில் பொதுமக்கள் 5 பேர் அல்லது அதற்கு மேல் கூடுவதற்கும், வாள், கத்தி, கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டம், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com