பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்களுடன் மறியல் செய்த கிராம மக்கள்

ஆண்டிப்பட்டி அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்களுடன் மறியல் செய்த கிராம மக்கள்
Published on

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் வரவில்லை என்றாலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து அவர்களாகவே படித்து விட்டு செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல டி.சுப்புலாபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். ஆனால் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர் களின் பெற்றோர், கிராம மக்கள் டி.சுப்புலாபுரம்-ஆண்டிப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் பணிக்கு வராததை கண்டித்தும், உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து சிறைபிடித்த பஸ்சை மீட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் உள்ளே சென்றனர். ஆனால் வகுப்பறைகள் திறக்காத நிலையில் வளாகத்திலேயே அவர்கள் அமர்ந்திருந்தனர். ஆசிரியர்கள் யாரும் வராததாலும், சத்துணவு கிடைக்காது என்பதாலும் ஒரு மணிநேரம் அமர்ந்திருந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com