

கடுமையான போராட்டத்திற்குப் பிறகுச் சொன்னதைப் போலவே சொந்தமாக காலியா என்ற கப்பலோடு தமிழகம் வந்தார் வ.உ.சி. அதன்பிறகு தமது செயலாளர் எஸ்.வேதமூர்த்தியை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி லாவோ என்ற மற்றொரு கப்பலையும் வாங்கி வரச்செய்தார். 2 கப்பல்களும் 1907ல் தூத்துக்குடிக்கும்இலங்கைக்கும் இடையே ஓடத்தொடங்கின.
சுதேசி கப்பல்களின் பயணத்தால் ஆங்கிலேய கப்பல் நிறுவனம் பாதிக் கப்பட்டது. வெள்ளை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான 5 ரூபாய் பயணக்கட்டணத்தைச் சரிபாதியாக குறைத்து ரூ.2.50 ஆக மாற்றினார்கள். வ.உ.சியும் அதே கட்டணத்தை நிர்ணயித்தார். பின்னர் அதையும் பாதியாக குறைத்த வெள்ளைக்காரர்கள், கடைசியில் இலவசப் பயணம் என்று அறிவித்தார்கள்.
பிறகு இலவசப் பயணத்தோடு ஆளுக்கொரு குடையும் இலவசம் என்றார்கள். சுதேசி கப்பலின் வெற்றி; உங்களின் வெற்றி. நம் நாட்டின் வெற்றி. வெள்ளையனிடம் ஏமாந்து விடாதீர்கள். சுதேசி கப்பல் இல்லாவிட்டால் மீண்டும் இஷ்டம் போல கட்டணம் வசூலிக்கத் தயங்க மாட்டார்கள் என உணர்வை ஊட்டி, கப்பல் கம்பெனியை வ.உ.சி. விடாமல் நடத்தினார்.
கப்பல் ஓட விட்ட அடுத்த ஆண்டில் தூத்துக்குடி கோரல் மில் (ஏ அண்டு எஃப் ஹார்வி மில்) பணியாளர்களின் போராட்டத்தையும் வ.உ.சி. முன்னின்று நடத்தி ஊதிய உயர்வு வாங்கிக் கொடுத்தார். இந்தியாவிலேயே வெற்றிகரமாக நடந்த முதல் தொழிலாளர் போராட்டம் இதுதான்.
தொழிலாளர் போராட்டம் என்பதைத்தாண்டி, அதுவரை உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே பரவி இருந்த சுதந்திரப் போராட்ட உணர்வை கீழ்த்தட்டு தொழிலாளர் சமூகத்திற்கும் வ.உ.சி. கொண்டு சென்றார். ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலின் உச்சத்திற்குப் போனார்கள். இந்த நேரத்தில் விடுதலைப்போரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான விபின் சந்திரபால் சதி வழக்கொன்றில் சிறைவாசம் முடித்து விடுதலையானார். அவர் விடுதலையாகும் நாளை (9.3.1908) நாடு முழுவதும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், தூத்துக்குடியில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் விஞ்ச் தடை விதித்தார். இதனால் வ.உ.சிதம்பரனாரும் அவருடைய உற்ற நண்பரான சுப்ரமணிய சிவாவும் திருநெல்வேலியில் கூட்டம் நடத்த முடிவு செய்தனர். அங்கும் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி தாமிரபரணி ஆற்றங்கரையில் இருவரும் மேடை ஏறினர். பெருங் கூட்டமும் திரண்டது. சிதம்பரனாரும், சிவாவும் விடுதலை நெருப்பாக மாறி முழங்கினர். அதிலும் சிதம்பரம் பிள்ளையின் வார்த்தைகள் தீக்கங்குகளாக வந்து விழுந்தன.
மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டிவிடலாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று தெரிந்தாலே போதும், வெள்ளையர்கள் தாமாகவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறிவிடுவார்கள். இந்தியாவில் மிஞ்சிப் போனால் மொத்தம் 50 ஆயிரம் வெள்ளையர்களே இருப்பார்கள். அவர்களைப் பலாத்காரமாக நாம் வெளியேற்ற முடிவு செய்தால் அது மிகவும் எளிதான காரியம்தான். ஆனாலும் நாம் பலாத்காரத்தில் ஈடுபடக் கூடாது. அதே சமயத்தில் வெள்ளையரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதும் இல்லை. இந்தியர்களாகிய நாம், ஏற்கனவே தீர்மானித்தபடி பிரிட்டிஷ் துணி, சர்க்கரை, எனாமல் பாத்திரம் முதலிய பொருட்களை வாங்காமல் பகிஷ்கரித்தால் (புறக்கணித்தால்) ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள். வ.உ.சி. யின் இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் உணர்ச்சிப்பிழம்பாக உருமாறினர்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குத் துணைபோன அந்த மாவட்டத்துக்காரர் களுக்கு வீட்டு வேலை செய்யக்கூட ஆள் கிடைக்கவில்லை. அவர்களுடைய துணிகளை சலவை செய்ய சலவைத் தொழிலாளர்கள் விரும்பவில்லை. சவரம் செய்வதற்குத் தொழிலாளர்கள் மறுத்தனர். யாரும் அறிவிக்காமலேயே ஓர் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.
அதிர்ந்த ஆங்கிலேயர் சிதம்பரனாரையும், சிவாவையும் அடக்கத் திட்டமிட்டனர். தூத்துக்குடியில் அவர்களை என்ன செய்தாலும் கலகம் அதிகமாகிவிடும் என்று அஞ்சி, இருவரும் நெல்லைக்கு வந்து தன்னைச் சந்திக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் விஞ்ச் ஆணையிட்டார். 1908 மார்ச் 12ல் இருவரும் அவரைப் போய் பார்த்தனர். அப்போது ஆட்சியருக்கும் சிதம்பரனாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் நெல்லை மாவட்டத்தைவிட்டு உடனே வெளியேற வேண்டும்; அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதில்லை என நன்னடத்தை ஜாமீன் தர வேண்டும் என்று விஞ்ச் ஆணையிட்டார். அதற்கு மறுத்துவிட்டு எழுந்தார் சிதம்பரனார். இருவரும் அதே இடத்தில், ஆட்சியர் முன்னாலேயே கைது செய்யப்பட்டனர். (அப்போது நடந்த உரையாடலை பாரதியார் கவிதையாக வடித்துள்ளார்).
தூத்துக்குடியில் சிதம்பரனார் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. சில கடிதங்களை வெள்ளையரின் காவல்துறை கைப்பற்றியது. அதன் பிறகு நெல்லையில் வெடித்த கலவரத்தில் மாணவர்கள் என்ன செய்தார்கள்? வ.உ.சி. யின் எலும்பைப் பற்றி வெள்ளைக்கார நீதிபதி சொன்னது என்ன?
(ரகசியங்கள் தொடரும்).
உள்ளம் பூரித்த பாரதியார்!
சொன்னபடியே சுதேசி கப்பலை சிதம்பரனார் ஓடவிட்டதை தமது இந்தியா பத்திரிகையில் கருத்துப் படம் போட்டு பாராட்டினார் பாரதியார். வெகு காலமாக புத்திரப் பேரின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால், எத்தனை அளவற்ற ஆனந்தம் அடைவாளோ, அத்தனை அளவற்ற ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரத தேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாள் என்று உள்ளம் பூரிக்க எழுதவும் செய்தார்.
சுதேசி கப்பல் நிறுவனம்
தமிழில் சுதேசி நாவாய்ச் சங்கம் என்றழைக்கப்பட்ட சுதேசி கப்பல் கம்பெனிக்கு 15க்கும் மேற்பட்ட செல்வந்தர்கள் இயக்குநர்களாக இருந்து பணம் கொடுத்தனர். சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான பாலவநத்தம் ஜமீன்தாரும் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்தவருமான பாண்டித்துரைத் தேவர், தமக்குச் சொந்தமான ஒரு கிராமத்தை விற்று இரண்டு லட்ச ரூபாய் அளித்தார். அவரைத் தலைவராகவும் நிதி அளித்த மற்றவர்களுக்கு முக்கிய பதவிகளையும் கொடுத்துவிட்டு, கம்பெனியின் துணைச் செயலாளர் என்ற பொறுப்பினை ஏற்ற சிதம்பரம் தான் அனைத்தையும் முன்னெடுத்துச் சென்றார்.