நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்

அரியலூர்- ஜெயங்கொண்டம் தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.
நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்
Published on

அரியலூர்:

வாக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அரியலூர் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,64,012 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,013 வாக்காளர்களும் உள்ளனர். அவர்கள் வாக்களிக்கப்பதற்காக அரியலூர் தொகுதியில் 376 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 753 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். அரியலூர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்தனர். சுகாதாரத்துறையினர், வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்கினர். பல இடங்களில் ஆண்களும், பெண்களும் சமூக இடைவெளி இல்லாமல் வரிசையில் நின்னர். ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள், ஆண்கள் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னுரிமை

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தையுடன் வந்த தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உடனடியாக ஓட்டுப்போடச்செல்ல முன்னுரிமை வழங்கப்பட்டது. அரியலூர் நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணியில் இருந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். அரியலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரத்னா, அரியலூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மைய வாயிலிருந்து உள்ளே செல்வதற்கு சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை அமர வைத்து அவரது உறவினர்கள் ஓட்டுப் போடும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அரியலூர் நகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்க 100 மீட்டருக்கு முன்பே தி.மு.க., அ.தி.மு.க.வினர் எதிரேரெதிரே வரிசையாக நின்று வாக்காளர்களை வரவேற்றனர்.

உடையார்பாளையம், ஆண்டிமடம்

இதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கமாக நின்றனர். ஆண்டிமடம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு போடப்பட்ட வட்டத்துக்குள் வாக்காளர்கள் நிற்க வைக்கப்பட்டனர்.

விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முககவசம் இல்லாதவர்களுக்கு முககவசம் வழங்கி ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் சில பகுதிகளில் சமூக இடைவெளியை வாக்காளர்கள் கடைபிடிக்காமல் இருந்தனர்.

ஆர்வமுடன் வாக்களித்த நரிக்குறவர்கள்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள காவட்டேரி கிராமத்தில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் நேற்று மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் வாக்குச்சாவடிகளில் தரமில்லாத கையுறைகள் வழங்கப்பட்டதால் குறிப்பிட்ட சின்னங்களில் வாக்கு அளிக்க முடியாமல் சிரமப்பட்டதாக முதியவர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் தெரிவித்தனர். மேலும் தழுதாழைமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமூக இடைவெளி பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, சொக்கலிங்கபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தனது தாயுடன் வந்தார். அங்கு அவருடைய தாய் வாக்களித்தார். ஆனால் பாலுவுக்கு வாக்கு சென்னையில் இருப்பதால் அவர் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை. இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், அவரும் வாக்களிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com