செல்போன் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் சாவு

அண்ணாநகரில் 2-வது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிய மாணவர் தவறி விழுந்ததில், பரிதாபமாக பலியானார்.
செல்போன் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் சாவு
Published on

பூந்தமல்லி,

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியை சேர்ந்தவர் ரவிபாட்டிபனிந்திரன் (வயது 22). இவர் அண்ணாநகர், சாந்தி காலனியில் உள்ள வீட்டில் தங்கி அங்குள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 30-ந் தேதி அன்று அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்று, அங்குள்ள 2-வது மாடியில் நின்று கொண்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென கால் இடறியதில் தடுமாறிய அவர் தலைக்குப்புற கீழே விழுந்தார். இதில், அவருக்கு முதுகு தண்டு, தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருமங்கலம் போலீசார், காயமடைந்த ரவிபாட்டிபனிந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிபாட்டிபனிந்திரனை அவரது பெற்றோர் சொந்த ஊரான ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ரவிபாட்டிபனிந்திரன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com