பாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார்.

இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் 4 மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பேசிய ஆடியோ விவரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் நிர்மலாதேவி கல்லூரி நிர்வாகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதன் பேரில் கல்லூரி செயலாளர் ராமசாமி அருப்புக்கோட்டை நகர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நிர்மலாதேவியின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில் நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதி, அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தனபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். இரவு நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் தொடக்கத்தில் நிர்மலாதேவி தான் செல்போனில் பேசியதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று மட்டும் வலியுறுத்தி கூறியதாக சொல்லப்படுகிறது. கல்லூரி நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்துடன் தன்மீது நடவடிக்கை எடுத்துவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் நிர்மலாதேவி, மாணவிகளுடனான செல்போன் உரையாடலில் குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

நேற்று காலையில் மீண்டும் பேராசிரியை நிர்மலாதேவியிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். போலீஸ் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் நிர்மலாதேவி தனக்கு இம்மாதிரியான தகவலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராக பணியாற்றும் ஒருவரும், ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட மற்றொருவரும் தெரிவித்ததாக கூறியுள்ளார். துறைத்தலைவராக பணியாற்றும் நபர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியிலேயே பேராசிரியை நிர்மலாதேவி முன்பு படித்த போது அவருடன் படித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நிர்மலாதேவி தெரிவித்த அந்த 2 நபர்களிடமும், விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பேராசிரியை நிர்மலாதேவி தெரிவித்துள்ள இந்த 2 நபர்கள் தவிர வேறு யாரேனும் நிர்மலாதேவியை பின்னால் இருந்து இயங்கி உள்ளார்களா என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது மிகுந்த ஜாக்கிரதையாக கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் பாலியல் தொடர்பான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை.

இதில் இருந்து இதற்கு முன்பும் இது போன்று மாணவிகளிடம் நேரடியாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு பேசியஅனுபவம் அவருக்கு இருக்கக் கூடும் என கருதத் தோன்றுகிறது.

தற்போது அவர் செல்போனில் மாணவிகளிடம் தொடர்பு கொண்ட போது அந்த மாணவிகள் செய்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதால் பேராசிரியை நிர்மலாதேவி போலீஸ் விசாரணைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் விசாரணையில் இன்னும் முழு விவரங்களை தெரிவிக்க முன்வரவில்லை என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com