

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போக சாகுபடி நடைபெறும். தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் கோடைநெல் சாகுபடி முடிவடைந்து, முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் 97 அடிக்கு தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நிச்சயம் தண்ணீர் திறந்துவிடப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளையும் தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. மழையினால் காட்டூர், சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த நெற்பயிர்கள் பெரியஅளவில் பாதிக்கப்படாது என வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
திருவையாறு-22, பூதலூர்-20, திருக்காட்டுப்பள்ளி-16, பாபநாசம்-16, அய்யம்பேட்டை-12, தஞ்சை-12, கும்பகோணம்-9, வல்லம்-8, கல்லணை-8, மஞ்சளாறு-7, திருவிடைமருதூர்-6, அணைக்கரை-4, குருங்குளம்-2.