

தர்மபுரி,
தர்மபுரி சவுலூர் பகுதியை சேர்ந்தவர் தேவகி (வயது 26). இவருக்கும், தர்மபுரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஞானமணி (32) என்பவருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், தேவகி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவகி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவரிடம் இருந்த குழந்தையை ஞானமணி அழைத்து சென்றார். வலுக்கட்டாயமாக குழந்தை தன்னிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனது கணவரிடமிருந்து குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என்றும் தர்மபுரி கூடுதல் மகளிர் கோர்ட்டில் தேவகி மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேவகியின் புகார் தொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஞானமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.