குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் தொழிலாளி மனு

தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த சுபஸ்ரீ மயங்கி விழுந்தார்.
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் தொழிலாளி மனு
Published on

ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகரை சேர்ந்த ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவர் தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் மதியழகன், மகள்கள் ஜனரஞ்சனி, கலைரஞ்சனி ஆகியோருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது சுபஸ்ரீ திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்பினார்கள். பின்னர் ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நான் சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். எனது வீட்டிற்கு மேல் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. இந்த கம்பிகளை மாற்றி அமைக்கக்கோரி நான் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அதைத்தொடர்ந்து மின் கம்பிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கையில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின் வாரிய அதிகாரிகள் பணியை நிறுத்தி விட்டனர். இதனால் எனது வீட்டின் கட்டுமான பணி பாதியில் நிற்பதோடு வீட்டிற்கு மேல் மின் கம்பிகள் செல்வதால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் விபத்து ஏற்படும் என்ற நிலையில் உயிருக்கு ஆபத்தோடு வாழ்வதைவிட குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com