மரச்செக்கு

நமது முன்னோர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளையும் இயற்கையான முறையிலேயே தயாரித்து இருக்கிறார்கள்.
மரச்செக்கு
Published on

மது முன்னோர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளையும் இயற்கையான முறையிலேயே தயாரித்து இருக்கிறார்கள். தேங்காய், எள், கடலை, ஆமணக்கு ஆகியவற்றை வெயிலில் உலரவைத்து மரச்செக்கு மூலம் எண்ணெய்களை உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மரச்செக்கு மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் செய்யப்படுகிறது. அந்த மர உரலில் மாடுகளை பூட்டி இயக்கச்செய்து அவற்றில் உலர வைத்த தேங்காய், எள், கடலை, ஆமணக்கு ஆகியவற்றை போட்டு ஆட்டி எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது இயற்கை குணம் நிறைந்தது.

மரச்செக்குகளும் கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதலை சந்தித்து விட்டது. மாடுகளை பூட்டி மர உரலை இழுக்கும் வேலையை இப்போது இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எரிபொருள் அல்லது மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களைக்கொண்டு எண்ணெய் வகைகளை தயாரித்து வருகிறார்கள்.

மேலும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இரும்பு உலக்கைகளை பயன்படுத்தி எண்ணெய்யை பிழிந்து எடுக்கின்றனர். அப்போது எண்ணெய் அதிகமாக சூடேறுகிறது. இதனால் எண்ணெயில் இருக்கும் நல்ல கொழுப்பு சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறைந்து விடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் இயற்கை நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச்சத்தையும் நீக்குவதற்காக சோப்பு தயாரிக்கப் பயன்படும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைட்ராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீமை ஏற்படுகிறது. இது உடலில் உள்ள செல்களில் இணைந்து அதன் இயக்கத்தை தடுக்கிறது. இதனால் உடலில் பல நோய்கள் உண்டாகிறது. மேலும் இதய நோய், இள நரை, மூட்டுவலி, மூட்டு தேய்மானம், எலும்பு பலவீனம், குடல் நோய், புற்று நோய், ரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிறது.

ஆனால் மரச்செக்கிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஊட்டச்சத்துக்கள், உயிர் சத்துக்கள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாது பொருட்கள், நார் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம் உள்பட பல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. இதனால் ஆயுளும் நீடிக்கிறது.

மரச்செக்கு எண்ணெய் வகைகளிலும் கலப் படம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவற்றின் தரம் சுத்தமானதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும். செக்கில் தயாரித்த எண்ணெய் நுரையுடன் கூடிய மணத்துடனும், அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். சற்று கசடுகளோடு காட்சியளிக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் பார்ப்பதற்கு கண்ணாடி போன்று பளபளப்புடன் காட்சியளிப்பதால் மக்களின் கவனத்தை எளிதில் ஈர்த்துவிட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com