

நாகர்கோவில்:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவன்- மனைவி தகராறு
சாமியார்மடம் அருகே உள்ள மருதூர்குறிச்சி சாத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34), தொழிலாளி. இவருக்கு கீதா (29) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் மற்றும் பாலப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் வைத்து ரமேசுக்கும், கீதாவுக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொழிலாளி தற்கொலை
இதனால் மனமுடைந்த நிலைக்கு சென்ற ரமேசுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பள்ளியாடி ரெயில் நிலையம் வந்த ரமேஷ், அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் உடல் சிதறி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ் மற்றும் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் முன்பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.