போனஸ் தொகையை திருப்பி செலுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

தீபாவளிக்காக நிர்வாகம் கொடுத்த 8.33 சதவீத போனஸ் தொகையை திருப்பி செலுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
போனஸ் தொகையை திருப்பி செலுத்தி தொழிலாளர்கள் போராட்டம்
Published on

குன்னூர்,

குன்னூரை அடுத்த உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 8.33 சதவீத போனஸ் வழங்குவதாக நிர்வாகத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், எஸ்டேட் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இந்த முறை 8.33 சதவீத போனஸ் மட்டுமே வழங்க முடியும் என்று நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 17-ந் தேதி குன்னூரில் தொழிலாளர் நல துணை ஆணையர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஆனாலும் எஸ்டேட் நிர்வாகம் திட்ட மிட்டபடி அனைத்து தொழிலாளர்களுக்கும் 8.33 சதவீத போனஸ் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. இந்த பணத்தை தொழிலாளர்கள் பலர் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நிர்வாகம் வங்கிக்கணக்கில் செலுத்திய போனஸ் தொகையை நிர்வாகத்துக்கே திருப்பி செலுத்தும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள யூனியன் வங்கிக்கு பஸ் மற்றும் லாரிகளில் வந்தனர். அவர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் நிர்வாகம் செலுத்திய போனஸ் தொகையை மீண்டும் நிர்வாகத்திற்கே திருப்பி அனுப்பினர். இதற்காக வங்கியில் தொழிலாளர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com