24 மணி நேரத்தில் சித்தராமையா சிறைக்கு செல்வாரா? எடியூரப்பா மனநோயாளி போல் பேசுவதை நிறுத்த வேண்டும்

எடியூரப்பா மனநோயாளி போல் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
24 மணி நேரத்தில் சித்தராமையா சிறைக்கு செல்வாரா? எடியூரப்பா மனநோயாளி போல் பேசுவதை நிறுத்த வேண்டும்
Published on

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எடியூரப்பா நேற்று(அதாவது நேற்று முன்தினம்) பா.ஜனதா போராட்டத்தில் பேசும்போது, கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் 24 மணி நேரத்தில் ஊழல் வழக்கில் சித்தராமையா சிறைக்கு செல்வார் என்று கூறி இருக்கிறார். எங்கள் ஆட்சி காலம் முடிவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடக்கிறது.

மத்திய அரசின் கீழ் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய விசாரணை முகமை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. சித்தராமையா ஊழல் செய்ததற்கான ஆவணங்கள் ஏதாவது எடியூரப்பாவிடம் இருந்தால், எதற்காக இன்னும் 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இன்றே சித்தராமையாவை சிறைக்கு அனுப்புங்கள்.

அதை விடுத்து மனநோயாளி மற்றும் பித்து பிடித்தவர்கள் போல் பேசுவதை எடியூரப்பா நிறுத்த வேண்டும். காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்தராமையா ரூ.1,000 கோடி கருப்பு பணம் அனுப்பியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை எடியூரப்பா கூறி இருக்கிறார். அவர் முதலில் தனது மனநோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதன் பிறகு சித்தராமையா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.

அதை விடுத்து நீதிபதியை போலவும், சர்வாதிகாரி போலவும் எடியூரப்பா பேசுவது சரியல்ல. வருமான வரி அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் நடத்திய சோதனை குறித்த விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படுகிறது. ஆனால் வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் நடந்த சோதனை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதை கவனிக்கும்போது காங்கிரஸ் கட்சியின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சதி நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. பா.ஜனதாவில் எடியூரப்பா பலிகடாக ஆக்கப்படுகிறார். அதனால் அவர் எச்சரிக்கை இருப்பது நல்லது.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com