பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் மாது தலைமை தாங்கினார். மொரப்பூர் ஒன்றிய தலைவர் கருணா, நிர்வாகி சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமசாமி கவுண்டர், சட்ட ஆலோசகர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், தேவதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த பணியிடங்களில் 50 சதவீதத்தை பிரதம சங்கங்களை சேர்ந்த தகுதி உள்ள பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 32.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

ஆவின் நிர்வாக செலவிற்காக சங்க பால் பண பட்டியலில் 0.10 பைசா பிடித்தம் செய்ததை நிறுத்தி சங்கங்களுக்கே மீண்டும் வழங்கிய தமிழக அரசுக்கும், பால்வளத்துறை ஆணையாளர், ஆவின் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிப்பது.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதன்பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் கூறுகையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளின்படி பால் கொள்முதல் செய்ய வேண்டும். பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கவனிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும், என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com