ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவருடைய மகன் சதாம் உசேன் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதால், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, சதாம் உசேன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

மாலையில் அங்கு குளிக்க சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சதாம் உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கில் சொந்த ஊருக்கு வந்த வாலிபர், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com