நொய்யல்,
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளையம் நத்தமேடு கலைக்கூத்து நகரில் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லாததால் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக இங்கு வசித்து வரும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது இவர்களது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் கூடாரங்களில் வசித்து வருவதால் மழை, வெயில் காலங்களில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. விஷ ஜந்துக்கள் உள்ளிட்டவை கூடாரத்திற்குள் அவ்வப்போது வருவதால் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.
கருப்பு கொடி கட்டி போராட்டம்
இந்த நிலையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காததை கண்டித்தும், உடனே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது வீட்டு முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சர்க்கஸ் கலைஞர்கள் சிலர் நிருபர்களிடம் தெரிவிக்கையில், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இன்று வரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை தொடங்கி உள்ளோம். விரைவில், பட்டா வழங்கவில்லை என்றால் வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.