குடியுரிமை சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் தீர்மானம்

குடியுரிமை சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

மதுரை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு மதுரை ஒபுளா படித்துறையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அகமது நவவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முஜிபுர்ரகுமான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், மக்களை மத ரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை இயற்றி உள்ள பா.ஜ.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குடியுரிமையை மத அடிப்படையில் வழங்க முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவுக்கு முரணானது. சாதி, இனம், நிறம் அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தக்கூடாது என அரசியல் அமைப்பு சட்ட பிரிவு குறிப்பிடுகிறது. எனவே குடியுரிமை சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம் நிறவேற காரணமாக அ.தி.மு.க. இருந்தது கண்டிக்கத்தக்கது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com