திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் திருப்பூர் செல்லாண்டியம்மன் துறையில் 26-வது நாளாக நேற்று தொடர் முழக்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில் நேற்று குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை 6 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிகம் பேர் திரண்டனர்.
புதுமார்க்கெட் வீதி, மங்கலம் ரோடு, காமராஜர் ரோடு, முனிசிபல் வீதி ஆகிய ரோடு சந்திக்கும் இடத்தில் திரளானவர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் மாநகரில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் நடந்த மறியலால் மாநகர் முழுவதும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அப்படியே நின்றன. ஒவ்வொரு ரோட்டிலும் வாகனங்கள் அணிவகுத்து காணப்பட்டன.
சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மாநகர தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வரும் நாட்களில் அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன்காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. அதன்பிறகு மாநகரில் இரவு 7 மணிக்கு பிறகே வாகன போக்குவரத்து சீரானது.