தேனி:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை தவிர மற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளதால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கோட்டூர், ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், சில தனியார் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின. உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் வரவேற்றனர்.
கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளியுடன் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல் நாளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்தும், கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.