வாஷிங்டன்,
சிக்கிம் மாநில எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது. இதனால் அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டன.
இதையடுத்து இந்தியாசீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இந்திய படைகளை வாபஸ் பெற்றால் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என சீனா பிடிவாதம் பிடிக்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான பதட்டத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறும் போது, தற்போது நிலவும் இந்த சூழலை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து பின்பற்றி வருகிறோம். இருநாடுகளும் எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.