குளச்சல் அருகே செம்மண் கடத்தல்: கைதான வாலிபர் பற்றி திடுக்கிடும் தகவல்

குளச்சலில் செம்மண் கடத்திய விவகாரத்தில் பொக்லைன் எந்திர உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இவர் புதையல் விவாகரத்தில் போலீசார் மீது ஏற்கனவே புகார் கொடுத்தவர் என்பது தெரிய வந்தது.
Published on

குளச்சல்,

குளச்சல் செம்பொன்விளை துணைமின்நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் செம்மண் அள்ளி கடத்தி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள், மண் அள்ள பயன்படுத்திய 2 டெம்போக்கள், பொக்லைன் எந்திரத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து போலீசார் 2 டெம்போக்கள், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து, அவற்றின் பதிவு எண்ணை கொண்டு உரிமையாளர்களை தேடி வந்தனர்.

இதில் பொக்லைன் எந்திரம் உரிமையாளர் பாலப்பள்ளத்தை சேர்ந்த ஜெர்வின் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதுபோல் டெம்போ டிரைவர் அதே பகுதியை சேர்ந்த அஜின் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் செம்மண் வெட்டிய 3 பேரை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஜெர்வின் ஏற்கனவே போலீசார் மீது கடத்தல் புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரிடம் குறுகிய காலத்தில் அதிக பணம் புழங்கியதாகவும், புதையல் கிடைத்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து அவரை கருங்கல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 3 போலீசார் கடத்தி சென்று புதையல் பணம் கேட்டு மிரட்டியதாக ஜெர்வின் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அப்போதைய கருங்கல் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, அவருடன் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது புகார் கூறிய ஜெர்வின் தற்போது செம்மண் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com