

ஏரல்,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் 6 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன.
இதேபோன்று சிவகளை பரும்பு பகுதியில் நடைபெறும் அகழாய்வில் 4 முதுமக்கள் தாழிகள் முழுமையாகவும், 5-க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர், சிவகளையில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதிச்சநல்லூர், சிவகளையில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி செலவில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் முறைகள், அவர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்தார்கள்? என்பதை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு கிடைக்கப்பெறும் முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை மிகவும் பாதுகாப்பாக எடுக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில் வெண்கல மோதிரம், பழங்காலத்தில் புகைப்பிடிக்க பயன்படுத்திய குழாய் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகளையிலும் பலவித பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் பொருட்களை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பழங்கால தமிழர்களின் நாகரிக வாழ்வியல் முறைகள் உலக்குக்கு தெளிவாக தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.