திருப்பூரில் இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

திருப்பூரில் இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சிவகுப்பினை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
Published on

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு வட்டம் ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு 37 நாட்கள் நடக்கிறது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்புகளை சேர்த்து மொத்தம் 15 மாவட்டங்களில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

7 மாவட்ட இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பயிற்சியினை நிறைவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 163 இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் 140 இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் என மொத்தம் 303 அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கணக்கு மற்றும் கணினி பயிற்சி போன்ற பாட திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே அரசு அலுவலர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பு மூலம் அனைத்து அலுவல் சார்ந்த நடைமுறைகளை கற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு விரைந்து அரசின் சேவைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், திறன் மேம்பாட்டு பயிற்றுநர் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் கூடுதல் இயக்குனர் (பொது) ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) பழனி, துணை கலெக்டர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி, ஏஞ்சல் பொறியியல் கல்லூரி முதல்வர் சக்திவேல், தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com