4 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு: கரூர் கொசுவலை நிறுவனத்தில் ரூ.435 கோடி வரி ஏய்ப்பு

கரூர் கொசுவலை நிறுவனத்தில் 4 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. இதில் வெளிநாடுகளுக்கு கொசுவலை ஏற்றுமதி செய்ததில் ரூ.435 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Published on

கரூர்,

கரூர் வெண்ணைமலையில் ஷோபிகா என்ற தனியார் கொசுவலை நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கரூர்-சேலம் பைபாஸ் ரோடு சிப்காட்டிலும், சின்னதாராபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் கொசுவலை உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் கொசுவலைகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி வரை அந்த நிறுவனம் சார்பில் வருமானம் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவன உரிமையாளர் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த நிறுவன கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தபோது, வரிஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி அன்று கரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக கார்களில் பிரிந்து சென்று வெண்ணைமலையில் உள்ள கொசுவலை அலுவலகம், கொசுவலை தயாரிக்கப்படும் இடங்கள், ராம் நகரிலுள்ள உரிமையாளர் வீடு என அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள் என்று மொத்தம் 20 இடங்களில் அதிரடியாக புகுந்து சோதனையை தொடர்ந்தனர்.

அப்போது ராம்நகர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.23 கோடி, 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சில இடங்களிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று 4-வது நாளாக வெண்ணைமலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது கொசுவலை உற்பத்திக்கான செலவு எவ்வளவு? பின்னர் அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் நிகர லாபம் என்ன? எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கொசுவலை ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது? அது தொடர்பாக அரசுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா? என ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரித்தனர்.

இந்த சோதனையின் முடிவில், ரூ.435 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது.

இந்த சோதனையில் கட்டு, கட்டாக கணக்கில் வராத ரூ.32 கோடியே 60 லட்சம் மற்றும் 10 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக நிறுவன உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர் இந்த வார இறுதியில் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com