அமைச்சர்களை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு

சட்டசபையில் அமைச்சர்களை கண்டித்து கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் நேற்று கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் பேசும் போது, பட்ஜெட்டில் கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ராஜீவ்காந்தி திட்டம் என்னவானது. ஏற்கனவே எங்கள் தலைவி ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க கேட்டோம். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கூட்டணி கட்சியை மகிழ்விக்க முதல்-அமைச்சர் ஏதேதோ அறிவிக்கிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் தி.மு.க. தலைவர்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தார். அப்போது அமைச்சர்கள் தரப்பில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது அவையில் இருந்த தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கோபத்துடன் எழுந்து ஒரு மிகப்பெரிய தலைவரை கடுமையாக அ.தி.மு.க. உறுப்பினர் விமர்சித்துப் பேசுகிறார். ஆனால் அமைச்சர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 2 அமைச்சர்கள் தூண்டி விட்டுத்தான் இப்படி அவர் (அன்பழகன் எம்.எல்.ஏ.) பேசுகிறார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் வெளியேறினார்கள்.

இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்ஜெட்டில் முதல்- அமைச்சர் நாராணசாமி ஒரு திட்டத்துக்கு தலைவர் கருணாநிதி பெயரை சூட்டினார். அது தொடர்பாக தேவையற்ற வார்த்தையை அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார். அதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு நாங்கள் கடந்த காலங்களில் அமைதியாக இருந்தோம்.

தலைவர் கருணாநிதிக்கு சில தெருக்களுக்கு பெயர் சூட்டுவதாக ஏற்கனவே முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சிலை அமைப்புக் கமிட்டி போடப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி ஒருமுறைகூட கூட்டப்பட்டது இல்லை. நான் 20 வருடம் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். ஆனால் ஒருமுறை கூட ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசியது இல்லை. தற்போது நடந்தது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிப்போம். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்களை கண்டித்து கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com