கருத்துக்கணிப்பு பொய்த்து போகும்: காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் நாராயணசாமி பேட்டி

காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்று நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தியின் உருவசிலைக்கு காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலையில் அண்ணாசாலை வெலிங்டன் பிளாசாவில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மூத்த தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், பொருளாளர் ஸ்ரீராம், தகவல் அறியும் உரிமை அணியின் மாநில துணைத்தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கருப்பு பட்டை அணிந்தவாறு பங்கேற்றனர்.

அமைதி ஊர்வலம் சத்தியமூர்த்தி பவன் வந்தடைந்ததும், ராஜீவ்காந்திக்கு நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினர் இசை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும், மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தினார்கள்.

இதையடுத்து நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜ.க.வும், நரேந்திர மோடியும் மக்களை நம்பி இல்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறுகிறார்கள். இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் முற்றிலும் பொய்த்து போகும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியை பிடிக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றும் தில்லுமுல்லு வேலையில் பா.ஜ.க., நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் ஈடுபட்டால் நாட்டில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com