‘காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும்’: பா.ஜனதா அல்லாத கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கும் - அபிஷேக் சிங்வி நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் எனவும், மத்தியில் பா.ஜனதா அல்லாத கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடமும், பொதுமக்களிடமும் ஏற்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசை அமைப்பதற்கு பிரதான கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தேர்தலில் கட்சிகள் பெறும் இடங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியோ, அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம் என கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் சிங்வி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணி ஒன்று மிக மிக வசதியான பெரும்பான்மையை பெறும். அது பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாதது.

பா.ஜனதா அல்லாத பல கட்சி கூட்டணி ஒன்று மே 23-ந் தேதிக்கு பிறகு மத்தியில் ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதன் சரியான நிறம் அல்லது தேவையான எண்கள் பற்றி தற்போது பேச வேண்டியது இல்லை. அதேநேரம் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், பா.ஜனதா இந்த தேர்தலில் அதிக இடங்களை பெற முடியாது. அந்த தேர்தலில் மோடி அலை மற்றும் 11 மாநிலங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் இடங்களை பா.ஜனதா பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அந்த மாநிலங்களில் அதுபோன்று வெற்றி கிடைக்காது. அந்த மாநிலங்களில் 50 சதவீத இடங்களை பெற்றாலும்கூட மீதமுள்ள தொகுதிகளுக்கு பா.ஜனதாவால் ஈடு செய்ய முடியாது.

ஏனெனில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பா.ஜனதாவோ, அ.தி.மு.க. போன்ற அதன் கூட்டணி கட்சிகளோ வெற்றி பெறுவது கடினம். குடியுரிமை திருத்த மசோதா காரணமாக வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு.

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஆங்காங்கே ஓரிரு தொகுதிகளை பா.ஜனதா பெற்றால் கூட 100 முதல் 120 தொகுதி பற்றாக்குறையை அந்த கட்சியால் நிரப்ப முடியாது. எனவே ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை பா.ஜனதாவால் பெற முடியாது. இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

தேர்தலுக்கு பின் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை காங்கிரசால் பெற முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிங்வி, தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை பொறுத்தவரை மேற்படி கட்சிகள் பா.ஜனதாவை விட காங்கிரசுக்கே நெருக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com