விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஆய்வு - வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வுப்பணியை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
Published on

புதுடெல்லி,

பூமிக்கு அடியில் இயற்கையாக கிடைக்கும் ஹைட்ரஜன், கார்பன் ஆகிய வாயுக்களின் கூட்டுப்பொருளான ஹைட்ரோ கார்பனை ஆக்சிஜனுடன் சேர்க்கும்போது எந்திரங்களை இயக்கும் சக்தி கிடைக்கிறது. இதனால்தான் எதிர்கால எரிபொருள் தேவைக்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் பூமிக்கு அடியில் ஹைட்ரஜனும், கார்பனும் நிறைந்திருப்பதாலேயே அந்த திட்டத்தை அங்கு செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 55 இடங்களில் மொத்தம் 59 ஆயிரத்து 282 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ கார்பனை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதன்பேரில் 9 நிறுவனங்கள் அதற்கு முன்வந்தன. இதில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) மற்றும் வேதாந்தா உள்பட 6 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அந்த நிறுவன பிரதிநிதிகளிடம் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

வேதாந்தா நிறுவனம், இந்தியா முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, அதனை எடுப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களும் அடங்கி உள்ளன. இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 116 கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல்துறையிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்தது.

இதன்பேரில், முதல்கட்டமாக 32 கிணறுகள் அமைப்பதற்கான எல்லைகளை வரையறுத்து கொடுத்து, அதில் ஆய்வுப்பணி மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை என்பது கிணறுகள் அமைய உள்ள இடத்தில் நீர் மற்றும் காற்றின் தரத்தை மதிப்பிடுதல், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பயன்கள், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கையாளும் திறன், கழிவு எண்ணெயை அப்புறப்படுத்துதல் என்பன உள்பட 41 அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அனுமதியில் சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுச்சேரியில் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு முயற்சி செய்தால் அதற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com