காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,600 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Published on

பென்னாகரம்,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்தது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக கர்நாடகத்தின் முக்கிய அணைகளான மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூருவில் உள்ள கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்திற்கு கடந்த 19-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. 12-வது நாளாக நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 11,619 கனஅடி நீர் தமிழகத்திற்காக காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து நேற்று காலை முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,600 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் மற்றும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தொங்கு பாலத்தில் நின்றவாறு கண்டு ரசித்தனர். நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையால் ஒகேனக்கல்லில் நடைபாதை, அருவி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் அணையின் நீர்மட்டம் 46.49 அடியில் இருந்து நேற்று 47.67 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகமானதால் தினமும் ஒரு அடி வீதம் கடந்த 8 நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com