செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் மத்திய அரசு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் வளர்க்கப்பட்டு, அதில் இருந்து விந்து அணுக்கள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அலமாதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று திடீரென ஒப்பந்த அடிப்படையில் புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்ததாக தெரிகிறது. இதனால் புதிய ஆட்களை பணியமர்த்துவதற்கான பணிகள் நடப்பதால் பழைய ஒப்பந்ததொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பத் என்பவர் தலைமையில் மத்திய அரசு நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.