

சுரண்டை,
சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை சேர்ந்த ஒருவர் சென்னை அடையாறில் உள்ள தபால் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் சென்று வந்தார். பின்னர் அவர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, தனது மனைவியை சேர்ந்தமரத்தில் விட்டு செல்வதற்காக அவரை அழைத்து வந்திருந்தார். இந்த நிலையில் சுரண்டை சோதனை சாவடியில் அவர்களை பரிசோதித்தபோது, தபால் அலுவலக டிரைவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவரை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருடைய மனைவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தென்காசி மேலகரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் சுரண்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்
சென்னையில் இருந்து விக்கிரமசிங்கபுரத்துக்கு 3 பேர் வந்து உள்ளனர். இவர்களுக்கு கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு, விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் பெரிய தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அம்பை பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் சுசீலாபீட்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியவாணிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி குருகுலராமன், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, சிவந்திபுரம் பஞ்சாயத்து செயலாளர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின் ஆகியோர் அங்கு சென்றனர்.
கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் குமரி மாவட்டம் சுசீந்திரம் மருங்கூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர்களுடன் வேலை பார்த்து வந்ததால், நண்பர் வீட்டுக்கு செல்வோம் என்று முடிவு எடுத்து இங்கு வந்ததும் தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அம்பலவாணபுரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீடு உள்ள தெருவில் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு உள்ளது.