என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா: புதுச்சேரியில் திறந்தவெளியில் நடந்த சட்டசபை

பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து புதுச்சேரி சட்டசபை கூட்டம் திறந்தவெளியில் நடந்தது.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்பின் நேற்று முன்தினம் சட்டசபையில் கலந்து கொண்டு கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி கலந்து கொண்டது. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ. ஜெயபால் ஆவார். எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இதற்கிடையே நேற்று சட்டசபை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் முக்கிய செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய சட்டசபையின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், மைய மண்டபம் எதிரில் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திறந்தவெளியில் கூட்டத்தை நடத்தலாமா? என்பது பற்றி யோசித்தனர்.

அதன்படி உடனடியாக அந்த இடத்தில் பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டு, ஒலிபெருக்கி வசதியுடன் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் 12.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தாங்கள் வகிக்கும் துறைகளுக்கான மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தனர்.

இந்த கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் போதுமான காலஅவகாசம் இல்லை என்பதாலும் உடனடியாக கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தாலும் அதற்கு அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதி மறுத்தார்.

இதைத்தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் புதுவை சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார். இந்தியாவிலேயே திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com