சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி தனிமைப்படுத்திக்கொண்டார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், முதல்-மந்திரி திரிவேந்திர சிங்கும், 3 மந்திரிகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத் (வயது 59) தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் சுற்றுலா துறை மந்திரியாக உள்ள சத்பால் மகராஜூக்கு (68) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரது மனைவி அம்ரிதா ராவத், குடும்ப உறுப்பினர்கள் என மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள மந்திரி சத்பால் மகாராஜ், அவரது மனைவி அம்ரிதா ராவத் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாநில மந்திரிசபை கூட்டத்தில் சுற்றுலா மந்திரி சத்பால் மகாராஜ் கலந்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத்தும், மேலும் 3 மந்திரிகளும் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்

இருப்பினும், மத்திய அரசின் விதிமுறைப்படி, மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரிகளோ, அதிகாரிகளோ சுய தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என மாநில சுகாதார துறை கூறுகிறது.

இதுபற்றி மாநில சுகாதார துறை செயலாளர் அமித் நேகி கருத்து தெரிவிக்கையில், மந்திரிகளும், அதிகாரிகளும் சத்பால் மகாராஜூடன் நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் குறைந்த ஆபத்து கொண்டவர்கள் என்ற பிரிவில்தான் வருகிறார்கள். அவர்கள் இயல்பாக செயல்பட முடியும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

ஆனாலும், முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத்தும், மந்திரிகளான ஹரக் சிங் ராவத், மதன் கவுசிக், சுபோத் யுனியல் ஆகியோரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு எடுத்துள்ளனர் என முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்தது. இவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்கள் சுய தனிமையில் இருப்பார்கள். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அதன்பின்னர்தான் அவர்கள் அன்றாட பணிகளை கவனிப்பார்களா என்பது தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com