குன்னூர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரல்

குன்னூர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
குன்னூர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரல்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மஞ்சூர் அருகே ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி, ஓட்டுப் பட்டறையில், நடந்த திருமண நிகழ்ச்சி, தங்காட்டில் நடந்த துக்க நிகழ்ச்சி காரக்கொரையில் நடந்த காது குத்து நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் அரசு வழிமுறைப்படி குறைந்த நபர்கள் கலந்து கொள்ளாமல் அதிகம் பேர் கலந்து கொண்டனர். இதில் கெரோனா தொற்று பாதித்தவர்கள் பங்கேற்றதால் மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஊட்டியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஊட்டி அரசு ஆஸ்பத்திரி, குன்னூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 200-க் கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு, வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் நோய் பாதிப்பால் அவர்களது மன அழுத்தத்தை போக்க தினமும் காலையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

நடனம் ஆடினர்

இந்த நிலையில் ஊட்டி மற்றும் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள் முகக்கவசம் அணிந்தவாறு சுற்றி, சுற்றி வந்து நடனம் ஆடுகின்றனர். அவர்களோடு சேர்ந்து ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பணியாளர்களும் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நடனமாடினர். இந்த நடனத்தை சிலர் நின்று பார்ப்பது போல் காட்சி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com