கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் அதிர்ச்சி

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் அதிர்ச்சி
Published on

தேனி,

தேனி மாவட்டத்துக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான கண்காணிப்பு அதிகாரியாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலர் கார்த்திக் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய தேனிக்கு நேற்று வந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அதிகாரி கார்த்திக் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

கூட்டத்தை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு பழைய மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், உணவு முறைகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், தேனியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்பன்தெரு பகுதிக்கு சென்றார். அங்கு திட்டச்சாலை தடுப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வைத்தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி கார்த்திக் கூறுகையில், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் தேனி மாவட்டத்தில் நோய் பரவி உள்ளது. மாவட்டத்தில் மேலும் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக 1,600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தேனி பழைய அரசு மருத்துவமனையில் 94 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 4 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைகள்) தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக அவர் சுப்பன்தெரு, பழைய அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு ஆய்வு செய்ய சென்ற போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததை பார்த்தும், மக்கள் முக கவசங்கள் அணியாமலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமலும் உலா வந்ததையும் பார்த்து ஆய்வு அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். இதனால், கொரோனா அபாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com